மிட்டாய் கவிதைகள்!

வேரை மறந்த விழுதுகள்

July 23, 2013

verai marantha viluthukal

அப்பாவின் பெயருக்கு என்றோ
வந்து இருந்து பிரிக்கப்படாத
செல்லரித்த கடிதம் கண்டு,
சொத்துக்கள் இருக்கும் என்ற
சந்தோசத்தில் படிக்கப் போனான்..

“நல்லா இருப்ப என்ற நம்பிக்கையில
முதலும் முடிவுமா ஒரு கடுதாசி எழுதறேன்..
பாசத்தையும் கலந்து தான் பாலா உனக்குக் கொடுத்தேன்,
ஆனா தங்கத்தாலி மஞ்சக் கயிறா மாறிடுச்சு,
வாழ்ந்த வீடும் முதியோர் இல்லமா மாறிப்போச்சு,

நீ விட்டுப் போனபோதே பாதி உயிரு போயிருச்சு,
இப்ப மீதியையும் எடுத்துகிட்டு
உன் படத்த பாத்துகிட்டே உங்கப்பாவும் போய்ட்டாரு..
நீ இத படிக்கிறேனா, என் உயிரு எப்பவோ போயிருச்சு,

கண்ண கசக்கிட்டே என் கல்லறைக்கு வந்திராத,
துடைக்க முடியாம தாங்காது என் நெஞ்சு,
சம்பாதிக்க உனக்கு சொல்லிக் கொடுத்தோம்,
சேத்தி வெக்க சொல்றதுக்குள்ள சொல்லாம போய்டியே,
அத மட்டும் கத்துகிட்டு நல்ல இருடா என் மவனே!”
இப்படிக்கு இறப்பின் நுனியில் உன் அம்மா,

கண்டவுடன் கண்ணீருடன் கூட்டி வர சென்று விட்டான்,
முதியோர் இல்லத்திலிருந்த தன்
அப்பாவையும் அம்மாவையும்!


எழுத்தாளர்: எம்.ஆர்.கார்த்திக்